×

மக்கள் பிரச்னைகள் குறித்த 922 மனுக்களை காஞ்சிபுரம் கலெக்டரிடம் எம்பி டி.ஆர்.பாலு வழங்கினார்

தாம்பரம், அக் 31: தாம்பரம் சானடோரியம் பகுதியில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்தில் நேற்று காலை மழை வெள்ளம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கலெக்டர் பொன்னையா தலைமையில் பொதுப்பணித் துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.அப்போது, பெரும்புதூர் எம்பி டி.ஆர்.பாலு, கலெக்டர் பொன்னையாவை நேரில் சந்தித்து பெரும்புதூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாம்களில், பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என 922 மனுக்களை வழங்கினார்.அவருடன், திமுக எம்எல்ஏக்கள் தா.மோ.அன்பரசன், எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, அரவிந்த்ரமேஷ், செந்தில் இதயவர்மன் மற்றும் கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.

பின்னர் கலெக்டர் பொன்னையா, செய்தியாளர்களிடம் கூறியதாவது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை விட்டுவிட்டு பெய்து கொண்டிருக்கிறது. எந்த இடத்திலும் சாலை துண்டிப்பு இல்லை. திருநீர்மலை அருகில் தரைப்பாலம் துண்டிப்பு என செய்தி வந்தது. ஆனால் அது தரைப்பாலம் இல்லை. அங்கு ஏற்கனவே அடையாறு ஆறு செல்லும் வழியில் ஒரு பாலம் இருந்தது. அங்கு அடையாறு ஆற்றை அகலப்படுத்துவதற்காக இருபுறமும் அகலப்படுத்தி புதிய பாலம் கட்டப்படுகிறது. அந்த பாலத்தை கட்டுவதால் அதன் ஒரு ஓரத்தில் தரையோடு தரையாக 2 முதல் 3 அடியில் பொதுமக்கள் வாகனங்களில் செல்லவசதிகள் ஏற்படுத்துவதற்காக, சாலை போன்று அமைத்து இருந்தோம். ஆனால் தற்போது தண்ணீர் அதிகமாக இருப்பதால், நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஒரு ஓரமாக தண்ணீர் செல்ல வழி செய்துள்ளனர்.

இதற்கு மாற்று வழியாக அப்பகுதியில் இருந்து 3 கிமீ தொலைவில் உள்ள தாம்பரம் - சோமங்கலம் சாலையில் ஏற்கனவே முடிக்கப்பட்டு பயன்பாட்டிலுள்ள பாலத்தின் வழியாக திருப்பி உள்ளோம். இந்த 2 பாலங்களும் ஒரே நேரத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நிதியுதவி செய்தனர்.2 பாலங்களையும் ஒரே நேரத்தில் கட்ட முடியாது என்பதற்காக, முதலில் ஒன்றை முடித்துவிட்டு, தற்போது மற்றொரு பாலத்தின் பணிகள் நடக்கின்றன. எனவே மாற்று வழி ஏற்கனவே செய்யப்பட்டு அதன் வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன.தற்போது மழையளவு குறைந்து தண்ணீர் அளவு குறைந்த பின்னர், தற்போது சேதமடைந்துள்ள அந்த மாற்று பாதை மீண்டும் சரி செய்யப்பட்டு அவ்வழியாக வாகனங்கள் செல்லும் என்றார்.

Tags : TR Pal ,Kanchipuram Collector ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...